ஒமேக 3 கொழுப்பமிலங்கள் என்றால்??
இப்போது ஒமேகா 3 கொழுப்பமிலங்கள் (Omega-3 fatty acids ), அவற்றின் முக்கியத்துவம் என்பன பற்றி பரவலாக பேசப்படுவதுடன், பல நாடுகளில் இக்கொழுப்பமிலங்களை கொண்ட முட்டைகள், மாஜரீன் என்பவை சந்தைப்படுத்தப்படுகிறன. முன்னய எனது மீன் உண்ணலாம் எனும் பதிவிலும் ஒமேக 3 கொழுப்பமிலங்கள் உள்ள மீன்வகை பற்றி எழுதியுள்ளேன்.
இப்பகுதியில் ஒமேக 3 கொழுப்பமிலங்கள் என்றால் என்ன? அவை ஏன் எமக்கு அத்தியாவசியமானவை என்பவை பற்றி சிறிது சொல்ல்லாம் என்று நினைக்கிறேன்.
கொழுப்பமிலங்கள் (Fatty acids)
கொழுப்பு (Fat) உணவுகளின் முக்கிய செயற்படு பகுதியாக இருப்பவை கொழுப்பமிலங்களே. கொழுப்பமிலங்கள் கொழுப்பின் உருகுநிலையை (Melting point)/ கொழுப்பு பதார்த்தங்கள் எவ்வளவு விரைவில் பளிங்காக (Crystal) மாற்றம் அடைகிறது என்பதையும் தீர்மானிக்கிறன. அத்துடன் கொழுப்பமிலங்கள் கொழுப்பின் ஊட்டச்சத்து பெறுமானத்தையும் தீர்மானிக்கிறன. இங்கு ஊட்டச்சத்து பெறுமானங்கள் எனும்போது கொழுப்பில் இருந்து கிடைக்கும் சக்தி( Energy) ஐ மட்டும் கருத வில்லை. கொழுப்பமிலங்களால் உடலின் அனுசேபம் (Metabolism), உடல் நலம் போன்றவற்றில் ஏற்படும் விளைவுகளையும் உள்ளடக்கியதாகும்.
கொழுப்பமிலங்களை பொதுவாக அவற்றில் இருக்கும்
1. காபன், அணுக்களின் எண்ணிடக்கையை கொண்டு ( காபன் - காபன் சங்கிலி) ,
அல்லது
2. காபன் காபன் அணுக்களுக்கிடையே ஆனா பிணைப்பு வகையை கொண்டு வகைப்படுத்தலாம்.
1. நிரம்பிய கொழுப்பமிலம் ( Saturated fatty acid)
இவ்வகையான கொழுப்பமிலங்களில் காபன் அணுக்க்ளுக்கிடையே ஒற்றை பிணைப்பு காணப்படும்.
2. நிரம்பலடையாத கொழுப்பமிலம் (Unsaturated fatty acid)
இவ்வகையான கொழுப்பமிலங்களில் காபன் சங்கிலியில் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் காபன் காபன் அணுக்களுகிடையே இரட்டை பிணைப்பு காணப்படும்.
நிரம்பலடையாத கொழுப்பமிலங்களை மேலும்
a) ஒற்றை நிரம்பலடையாத கொழுப்பமிலங்கள் (Mono unsaturated fatty acids)
b) பல் நிரம்பலடையாத கொழுப்பமிலங்கள் ( Poly unsaturated fatty acids)

பல் நிரம்பலடையாத கொழுப்பமிலங்கள் மேலும் இரண்டாக வகுக்கப்படுகிறன.
a)ஒமேகா 6
b)ஒமேகா 3
இதற்கான விளக்கப்படம் மேலே உள்ளது. இங்கு ஒமேக என்பது கிரேக்க மொழியின் ஒரு எழுத்தாகும். இலக்கங்கள் காபன் அணுக்களுக்கிடையில் எந்த இடத்தில் முதலாவது இரட்டை பிணைப்பு வருகிறது என்பதை குறிப்பதாகும்.
ஒமேக 3 கொழுப்பமிலம்
வேறுபட்ட வகையான ஒமேக 3 கொழுப்பமிலங்கள், பல் வேறுபட்ட காபன் அணுக்களின் எண்ணிகையில் காணப்படுகிறன.
முக்கியமான ஒமேக 3 கொழுப்பமிலங்கள்
1. அல்பா லினொலெய்க் அமிலம் (Alpha linoleic acid )
இது 18 காபன் அணுகளையும், 3 இரட்டை பிணைப்புக்களையும் கொண்டது.
2. இகோசபென்ரினோயிக் அமிலம் (Eicosapentaenoic acid)
இது 20 காபன் அணுக்களையும், 5 இரட்டை பிணைப்புக்களையும் கொண்டது.
3. டொகொசொகெக்சினோயிக் அமிலம் (Docosohexaenoic acid)
இது 22 காபன் அணுக்களையும், 6 இரட்டை பிணைப்புக்களையும் கொண்டது.
அல்பா லினொலெய்க் அமிலம் லினோலெய்க் அமிலம் என்பவற்றை உணவின் மூலம் மட்டுமே பெற்று கொள்ள முடியும்.
மனித உடலானது அல்பா லினொலெய்க் அமிலத்தில் இருந்து இகோசபென்ரினோயிக் அமிலம்,
டொகொசொகெக்சினோயிக் அமிலம் ஆகிய வற்றை தயாரித்து கொள்ளும்.
இகோசபென்ரினோயிக் அமிலம் (Eicosapentaenoic acid) கல மென்சவ்வின் (Cell membrane)ஒரு கூறாகும்.
டொகொசொகெக்சினோயிக் அமிலம் மூளை, மைய நரம்பு தொகுதி, கண்ணின் பார்வைக்கலங்கள் என்பவற்றின் கலங்களின் கல மென்சவ்வுகளின் முக்கிய கூறாகும்.
ஒமேக 3 கொழுப்பமிலங்களின் இயற்கை மூலங்கள்
சோயா எண்ணேய், ரப் எண்ணேய் (Brassica Napus =Rape) என்பவற்றில் காணப்படுகிறது. லின் விதை எண்ணேய் மிக அதிக அளவாக 60% ஒமேக 3 கொழுப்பமிலத்தை கொண்டுள்ளது. வெல் நட், குறிபிட தக்க அளவு ஒமேக 3 கொழுப்பமிலத்தை கொண்டுள்ளது.
இலை மரக்கறி வகைகளும் குறிப்பிடத்தக்க ஒமேக 3 கொழுப்பமிலத்துக்கான மூலங்களாகும்.
கொழுபு நிறைந்த மீன், மீன் எண்ணேய் என்பனவும் மிக முக்கிடமான மூலங்களாகும்.
ஒமேக 3 கொழுப்பமிலத்தின் உடல் நலன் சார் பங்களிப்புக்கள்
ஒமேக 3 கொழுப்பமிலங்கள் பல நோய் பாதிப்புக்களில் இருந்து மனிதனை பாதுகாப்பதாக சொல்லப்படுகிறது. இவற்றில் சில இன்னும் சரியாக நிருபிக்கப்படவில்லை. பல நிருபிக்கப்பட்டுள்ளன.
1. இதய நோய்கள் (Cardiovascular disease)
ஒமேக 3 கொழுபமிலம் இதய நோயை குறைக்கிறது. கிரின்லாந்தில் அதிகளவில் கொழுப்பு நிறைந்த உணவு உண்போர்களிடையே மிக குறைந்தளவே இதய நோய்கள் இருப்பது அறியப்பட்டுள்ளது. இத்தாலியில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் 1 கிராம்/ நாள் எனும் விகிதத்தில் கொடுக்கப்படும் போது போது 45% இதய நோயை குறைப்பதாக அறியப்பட்டுள்ளது.
2. புற்று நோய்
ஒமேக 3 கொழுப்பமிலம் மார்பக புற்று நோய், சமிபாட்டு தொகுதியில் குத புற்று நோய் என்பவற்றை குறைப்பதாக அறியப்பட்டுள்ளது.
3. அல்சைமர், டிமென்சியா நோய்கள் (Alzheimer's and Dementia)
டொகொசொகெக்சினோயிக் அமிலம் அல்சைமர் நோயை குறைப்பதாக அறியப்பட்டுள்ளது. அத்துடன் மீன் உணவு, டினெசியா நோயை குறைப்பதும் அறியப்பட்டுள்ளது.
4. மனவழுத்தம் (Depression)
மனவழுத்த நோய் உள்ள வயதானவர்களின் குருதியில் ஒமேக 6 கொழுப்பமிலத்துக்கும் ஒமேக 3 கொழுப்பமிலத்துக்குமான விகிதம் நோய் அற்றவர்களின் குருதியிலும் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒமேக 3 கொழுப்பமிலம் மனித உணர்வுகளின் வெளிப்பாட்டில் இக்கொழுப்பமிலம் பங்கு வகிக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
5. கர்ப்ப காலத்திலும், குழந்தை பருவத்திலும்
கர்ப்ப காலத்தில் ஒமேக 3 கொழுப்பமிலங்கள் நிறைவாக கிடத்தால் குழந்தையின் நரம்பு தொகுதி, கண்ணின் பார்வைக்கலங்கள் என்பன சிறப்பாக விருத்தி அடைய உதவும் என சொல்லப்படுகிறது.
நாளாந்தம் உள்ளெடுக்க வேண்டிய ஒமேக 3 கொழுப்பமில அளவு
உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை
எமது நாளாந்த சக்தி உள்ளெடுப்பிம் 1-2% ஒமேக 3 கொழுப்பமிலம் மூலம் கிடைக்க வேண்டும் எங்கிறது.
மேலும் இவற்றில் 1.5-3 கிராம்/ நாள் அல்பா லினொலெய்க் அமிலமும் இகோசபென்ரினோயிக் அமிலம், டொகொசொகெக்சினோயிக் அமிலம்
என்பவை 0.5-1.8 கிராம்/ நாள் எனும் விகிதத்திலும் உள்ளெடுப்பது சிறப்பானது என சொல்லப்படுகிறது.
முடிவாக சிறுவர்களுக்கு மீன் உணவு கொடுப்பதன் மூலம், அவர்களின் மூளை வளர்ச்சியை சிறப்பாக அமைக்க முடியும். இதன் முகிய காரணம் மீன் அதிக அளவில் ஒமேக 3 கொழுப்பமிலத்தை கொண்டிருப்பதாகும். அத்துடன் வயதானவர்களும் இதை ஒமேக 3 கொழுப்பமிலம் முலம் இதய நோய், புற்று நோய் என்பன ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பை பெற முடியும்.
11 Comments:
நிறையத் தகவல்கள்...நிறையப் புதுத் தமிழ்ச்சொல்லெல்லாம் தெரிந்துகொண்டேன் விஜே.நன்றி. நான் DNA replicationபற்றி எடுதவேணும் என்று நினைச்சிருக்கிறன்.எப்ப சாத்தியமாகுதோ தெரியேல்ல பார்ப்பம்.
நன்றி சினேகிதி கருத்துக்கும், வருகைக்கும். நல்ல விசயம் கெதியா எழுதுங்கோ
ஜெயச்சந்திரன்...ஒமேகா3...என்னைப் போன்ற சொரியாசிஸ் உள்ளவர்களுக்கு ஒமேகா3 நல்லது. அதை உண்பது நல்ல பலனைத் தரும்.
என்னென்ன மீன்வகைகள் என்றும் சொல்லுங்களேன். தமிழ்ப் பெயர்களாக இருந்தால் வசதி.
G.ராகவன், வாருங்கள், உங்கள் கருத்துக்கு நன்றி. ஆங்கில பெயருக்கு ஏற்ற தமிழ் சொல் கேட்டல் எனக்கு சொல்ல தெரியாது. திருக்கை, விலாங்கு மீங்களை தவிர்ந்த வேறு மீன் வகையை காட்டி அடையாளம் சொல்ல சொன்னால் சொல்ல தெரியாது :(
நான் மீன் உண்பதுமில்லை. அதனால் தான் எனக்கு அறிமுகமில்லை. கடலுணவுகளை இரால், நண்டு, கணவாய், மீன் பெரும்படியாக பிரிக்க மட்டும் தான் தெரியும்.
எனக்கு தெரிந்த நண்பர்களை கொண்டு தமிழ் பெயர் அறிந்து சொல்ல முயற்சிக்கிறேன்.
உபயோகமான பதிவு...
நன்றி சேதுக்கரசி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
ஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்கா பதிவு போட்டாலும் நல்ல பதிவுகள் போடுறீர்.
தொடரவும்.
//ஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்கா பதிவு போட்டாலும் நல்ல பதிவுகள் போடுறீர்.
தொடரவும்//
வசந்தன் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் ஜெசி, இப்ப தான் உங்க கட்டுரையை படிச்சேன்.கூடுதலா ஒரு தகவல்.மெனோபாஸ் நிலையில் உள்ள பெண்களுக்கு ஒமேகா 3 கொண்ட உணவு மிகவும் நல்லது என்று ஒரு புத்தகத்தில் படித்தேன்.அதை உங்களோடு பகிர்ந்து கொண்டேன்.
பயனுள்ள பதிவு. நன்றி ஜெயச்சந்திரன்.
வைசா
கோவிந்து, வைசா உங்கள் இருவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Post a Comment
<< Home